வெள்ளகோவில் அருகே, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 6½ பவுன் நகை பறிப்பு - 3 பேரை போலீசார் தேடுகிறார்கள்


வெள்ளகோவில் அருகே, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 6½ பவுன் நகை பறிப்பு - 3 பேரை போலீசார் தேடுகிறார்கள்
x
தினத்தந்தி 5 Nov 2019 3:30 AM IST (Updated: 5 Nov 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 6½ பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 48). இவர் தனது தாய் சம்பூர்ணத்துடன் ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் இரவு வெள்ளகோவில் சந்தைக்கு காய்கறிகள் வாங்க சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு இருவரும் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

ஸ்கூட்டரை ராஜேஸ்வரி ஓட்ட பின்னால் சம்பூர்ணம் உட்கார்ந்திருந்தார். கரட்டுப்பாளையம் மயில் ரங்கம் ரோட்டில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள், ராஜேஸ்வரியின் ஸ்கூட்டரை கீழே தள்ளி விட்டனர்.

இதில் ஸ்கூட்டரில் இருந்து ராஜேஸ்வரியும், அவரது தாயும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகளில் ஒருவன், ராஜேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் நகையை பறித்தான். உடனே ராஜேஸ்வரி, திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அதற்குள் நகையை பறித்த ஆசாமி தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றான்.

இது குறித்து அவர் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் நகை பறிப்பு, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.எனவே போலீசார் அடிக்கடி ரோந்து செல்லும் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story