சிங்கப்பெருமாள் கோவில் அருகே இருவேறு விபத்து: ஏ.சி.மெக்கானிக் உள்பட 2 பேர் பலி


சிங்கப்பெருமாள் கோவில் அருகே இருவேறு விபத்து: ஏ.சி.மெக்கானிக் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 Nov 2019 3:30 AM IST (Updated: 5 Nov 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவில் அருகே இருவேறு விபத்துகளில் ஏ.சி.மெக்கானிக் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் என்.எச்.2 பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). இவர் தனது நண்பர்கள் கோவிந்தசாமி, தீபன், பாபு, பிரகாஷ், மனோகரன் ஆகிய 4 பேருடன் நேற்று அதிகாலை செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே செட்டிப்புண்ணியம் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரமாக நின்றிருந்த தனியார் பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரில் அமர்ந்து இருந்த பாபு என்பவர் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், காரில் வந்த கோவிந்தசாமி, தீபன், பிரகாஷ், மனோகர் ஆகிய 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

மேலும் அதே போல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள மகேந்திரா சிட்டி அருகே வரும்போது பின்னால் வந்த போர்வெல் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்திவேல் அதே லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துகள் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story