மழைநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம்: மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை - கலெக்டரிடம் மனு
விருதுநகர் அருகே அதிகாரிகள் தோண்டிய மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம் அடைந்த நிலையில் மெத்தமான செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சிறுவனின் பெற்றோருக்கு நிவாரணம் வழங்க கோரியும் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர்,
இதுகுறித்து ஓ.கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்த சிறுவனின் தாயார் மற்றும் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஓ.கோவில்பட்டி கிராமம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் 120 வீடுகளுக்கு 49 நாட்களுக்கு முன்னர் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்காக குழி தோண்டப்பட்டது. இந்த பணியை அதிகாரிகள் சரிவர செய்யாததால் குழியில் மழைநீர் தேங்கி இருந்தது. அதில் ஓ.கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த ருத்ரன் (வயது 3) என்ற சிறுவன் விழுந்து இறந்துவிட்டான்.
அதிகாரிகள் தோண்டப்பட்ட இந்த குழியில் எவ்வித பணியும் செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். பாதுகாப்பு கருதி குழியை மூட முயற்சி செய்த போதும் அதிகாரிகள் அதனை தடுத்துவிட்டனர். இந்த நிலையில் சிறுவன் ருத்ரன் குழியில் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும், அலட்சியமுமே சிறுவன் ருத்ரனின் மரணத்துக்கு காரணமாகிவிட்டது. எனவே இதற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுவனின் குடும்பத்தினருக்கு தக்க நிவாரணம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகரில் யூனியனில் உள்ள வி.முத்துலிங்காபுரம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் 40 வருடங்களாக செயல்பட்டு வந்த ரேஷன் கடை சேதம் அடைந்து விட்டதாகவும், தற்காலிகமாக பஞ்சாயத்து அலுவலகத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வரும் நிலையில் மழையால் பொருட்கள் சேதம் அடைந்து விட்டதாகவும் எனவே தங்களுக்கு புதிய ரேஷன் கடை கட்டி தருமாறும், அதுவரை இ-சேவை மையத்தில் ரேஷன் கடை செயல்பட அனுமதிக்குமாறு கோரி உள்ளனர்.
திருச்சுழி தாலுகா செங்குளம் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், தங்கள் பகுதியில் 50 ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்ததில் நோய் பாதிப்பால் வெங்காயம் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் எனவே விவசாயிகள் நலன் கருதி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உள்ளனர்.
ராஜபாளையம் தாலுகாவில் உள்ள எஸ்.ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாயத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள ராக்காச்சியம்மன் கோவிலில் பொளர்ணமி வழிபாடு செய்வதற்கு அனுமதி இல்லாத நிலையில் புரட்டாசி மாதம் தாசில்தார் மற்றும் போலீசார் முன்னிலையில் பூஜை நடத்தப்பட்டதாகவும், ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்றும் கோவிலில் வழிபாடு செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் தான் கடந்த 2018-ம் ஆண்டு பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய கிராமப்புற விளையாட்டுகளில் இந்திய அணியின் தலைமை பொறுப்பு ஏற்று நடத்தியதாகவும், இதில் தங்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்ததாகவும், பட்டப்படிப்பு முடித்துள்ள தனக்கு வேலை வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்துள்ளார்.
சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையினர் சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதியில் உள்ள அருந்ததியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய ஆதிதமிழர் பேரவை செயலாளர் மாரிசெல்வம் மனு கொடுத்துள்ளார்.
வீரசோழன் கிராமத்தில் அபிராமம் பகுதியில் இருந்து வந்து குடியேறி உள்ள திருமூர்த்தி, லட்சுமணன் ஆகியோரால் கிராம பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீரசோழன் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இதே போன்று வீரசோழன் தெற்குதெருவில் கிருஷ்ணன் கோவில் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் அப்பகுதியில் குடியிருப்போருக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story