சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் சவால்
சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா இரண்டு நாக்குகள் கொண்ட அரசியல்வாதி. தனது பேச்சு அடங்கிய ஆடியோ வெளியானதும், அது தன்னுடைய குரல் தான் என்று கூறினார். சுப்ரீம் கோர்ட்டில் அந்த ஆடியோ ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டதும் அவர் இன்று (அதாவது நேற்று) அந்த ஆடியோ பொய்யானது என்று கூறியுள்ளார்.
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று எடியூரப்பா சொல்கிறார். பா.ஜனதாவின் அனைத்து தலைவர்களுக்கும் தலை கெட்டுவிட்டது. அவர்களை உடனே மத்திய அரசின் நிமான்ஸ் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும். ஆடியோ வெளியானது குறித்து உட்கட்சி விசாரணைக்கு பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அந்த ஆடியோ பா.ஜனதா நிர்வாகிகள் மூலம் வெளியானது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல என்று கூறி எடியூரப்பா தப்பிக்க நினைப்பதை கைவிட வேண்டும். ஒருவேளை அந்த குரல் தனது இல்லை என்றால், எடியூர் சித்தலிங்கேஸ்வரா கோவிலில் சத்தியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்று எடியூரப்பா சொல்கிறார். துணிச்சல் இருந்தால் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் தயாரா?. பா.ஜனதாவினர், நீதித்துறையை தவறாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். பொய் தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார்கள்.
இவ்வாறு வி.எஸ்.உக்ரப்பா கூறினார்.
Related Tags :
Next Story