நீர்வரத்து குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
பின்னர் இரவில் பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 9 மணிக்கு மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் குண்டாறு, கருப்பாநதி, கடனாநதி, ராமநதி ஆகிய 4 அணைகள் நிரம்பி வழிகின்றன. பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 143 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் 133.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,392 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1,214 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் ஓடி கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.19 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 231 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 50 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை 129.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 90 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை-7, ஆய்க்குடி-12, சேரன்மாதேவி-10, பாளையங்கோட்டை-32, நெல்லை-29, ராதாபுரம்-2, சங்கரன்கோவில்-22, செங்கோட்டை-10, சிவகிரி-13, தென்காசி-14, பாபநாசம்-13, சேர்வலாறு-27, மணிமுத்தாறு-2, கடனா-27, ராமநதி-12, கருப்பாநதி-3.50, குண்டாறு-10, நம்பியாறு-10, அடவிநயினார்-12.
Related Tags :
Next Story