கை, கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்: விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்தது அம்பலம்
பல்லாவரம் அருகே கை, கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தவர், விடுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ததும், போலீசுக்கு பயந்து அவரது உடலை விடுதி ஊழியர்கள்தான் கை, கால்களை கட்டி முட்புதரில் வீசியதும் தெரிந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் வெட்டர்லைன் ராணுவ மைதானம் அருகே சாலை ஓரம் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணமாக கிடப்பதாக வந்த தகவலின் பேரில் பல்லாவரம் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில், பிணமாக கிடந்தவர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன் (வயது 45) என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்ததும் தெரிந்தது.
மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு கை, கால்களை கட்டி உடலை முட்புதரில் வீசி இருக்கலாம் என முதலில் போலீசார் கருதினர்.
இந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆனந்தன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. ஆனால் அவரது கை, கால்களை கட்டி எப்படி தற்கொலை செய்தார்? என்பது போலீசாருக்கு புதிராக இருந்தது.
இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது.
தற்கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் ஆனந்தன், அசோக்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். விடுதி அறையில் வைத்து அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதையறிந்த விடுதி ஊழியர்கள், விடுதியில் வைத்து ஆனந்தன் தற்கொலை செய்த தகவல் வெளியே தெரிந்தால் தொழில் பாதிக்கப்படும். அத்துடன் போலீஸ் விசாரணைக்கும் அழைப்பார்கள் என பயந்தனர்.
எனவே விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தற்கொலை செய்த ஆனந்தனின் உடலை ஆட்டோவில் எடுத்து வந்து, அவரது கை, கால்களை கட்டி பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் உள்ள முட்புதரில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதி உரிமையாளரான அனகாபுத்தூரை சேர்ந்த ஜோசப் (55) உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story