உத்திரமேரூர் அருகே நகைக்கடை சுவரில் துளைபோட்டு வெள்ளிபொருட்கள் திருட்டு


உத்திரமேரூர் அருகே நகைக்கடை சுவரில் துளைபோட்டு வெள்ளிபொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 4 Nov 2019 9:45 PM GMT (Updated: 2019-11-05T01:56:12+05:30)

உத்திரமேரூர் அருகே நகைக்கடை சுவரில் துளைபோட்டு வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்ச மதிப்பிலான தங்கநகைகள் தப்பியது.

உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த படூர் கூட்டுரோடில் நகைக்கடை மற்றும் அடகுக் கடை நடத்தி வருபவர் நாராயண்லால் (வயது 48). இவர் மாகரல் கிராமத்தில் வசித்து வருகிறார். தினசரி மாகரல் கிராமத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு தனது உறவினரை பார்க்க கோயம்புத்தூர் சென்றுவிட்டார். இந்நிலையில் நாராயண்லாலின் தம்பியான சர்தாராம் என்பவர் நேற்று காலை கடையினை திறந்து பார்த்த போது, கண்ணாடி பெட்டி உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் பதறிப்போன சர்தாராம் உடனே உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.

அதில், கடையின் சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையிலிருந்த வெள்ளி மெட்டி, கொலுசு, மோதிரம் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்று இருப்பதை கண்டறிந்தனர். மேலும் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் தங்க நகை வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பியதும் தெரியவந்தது. அதன்பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story