“மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்க திட்டம்” இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
“மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டம் உள்ளது“ என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
இஸ்ரோ தலைவர் சிவன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
நெல்லை மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்தும மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பி செல்கிறேன். சந்திரயான்-2 செயற்கை கோளின் ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது. அதில் இருக்கும் பாகங்கள் நன்றாக செயல்பட்டு வருகிறது. அடுத்ததாக இந்த மாதத்தில் (நவம்பர்) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கை கோள் ஏவும் திட்டம் உள்ளது.
ககன்யான் திட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து வருகிறது. தற்போது ககன்யான் திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வு நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் விண்வெளி வீரர்கள் பயிற்சிக்காக ரஷியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ககன்யான் திட்டத்தின் அடிப்படை வேலைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது செமி கிரையோஜெனிக், கிரையோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. வரும் காலங்களில் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் என்ஜின்கள் உள்பட பல புதிய ராக்கெட் என்ஜின்கள் வடிவமைக்கப்பட உள்ளன. மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டு வர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story