நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி: கலெக்டர் ஷில்பா வழங்கினார்


நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி: கலெக்டர் ஷில்பா வழங்கினார்
x
தினத்தந்தி 4 Nov 2019 10:00 PM GMT (Updated: 4 Nov 2019 8:26 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவ-மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லை, 

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் ‘தினத்தந்தி’ சார்பில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. மேலும், மாணவர் பரிசு திட்டத்தின்படி மாவட்டம் தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் ‘தினத்தந்தி‘யின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

2014-2015-ம் கல்வி ஆண்டில் இருந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி‘ கல்வி நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு தலா 10 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 34 மாவட்டங்களை சேர்ந்த 340 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

5-வது ஆண்டாக 2018-2019-ம் கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகளுக்கு ‘தினத்தந்தி‘ கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2018-2019-ம் கல்வி ஆண்டில் ‘தினத்தந்தி‘ கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 20 மாணவ-மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம்

1. மு.வேலம்மாள், மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன், கல்லணை

2. ந.கவிராஜ், பொதிகை பப்ளிக் மெட்ரிக்குலேசன் பள்ளி, திசையன்விளை

3. கா.செல்வமாரி, திருமுருகன் உயர்நிலைப்பள்ளி, வள்ளியம்மாள்புரம்.

4. ச.சோனா, சங்கர் மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர்.

5. சே.முகமது நாகூர், லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன்.

6. ஆ.சீதாலட்சுமி, ஸ்ரீசாரதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, அரியகுளம்.

7. பா.சுபிலாதேவி, இக்னேசியஸ் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.

8. மு.பரமேசுவரி, வணிக வைசிய சங்க உயர்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.

9. ர.தனலட்சுமி, ஸ்ரீசாரதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, அரியகுளம்.

10. க.முத்து கவியரசன், நி.வெ.ச. அரசு மேல்நிலைப்பள்ளி, ராதாபுரம்.

தூத்துக்குடி மாவட்டம்

11. மு.முருகேசுவரி, விமல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை.

12. ச.செந்தில்முருகன், தக்கர் மேல்நிலைப்பள்ளி, பண்ணைவிளை,

13. ரா.பாலராஜேசுவரி, பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாளன்விளை.

14. ச.எப்சிபா பியூலா, ஹென்றி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம்.

15. ரா.மம்தாராம், ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொம்மடிக்கோட்டை.

16. சு.சங்கரி, இந்து மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்திருநகரி.

17. பா.பவித்ரா, எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி.

18. ஜெ.முகேஷ் கோமதி, டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம்.

19. சு.இந்திரா, மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பண்டாரஞ்செட்டிவிளை.

20. உ.மகேசுவரி, புனித அலாய்சியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

மேற்கண்ட 20 மாணவ-மாணவிகளுக்கும் ‘தினத்தந்தி‘ கல்வி நிதி வழங்கும் விழா நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலையில் நடந்தது.

விழாவுக்கு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, 20 மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘தினத்தந்தி‘ பத்திரிகையின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பாராட்டுக்குரியது ஆகும். இன்றைக்கு நிதி உதவி வாங்க வந்துள்ள மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்த இடத்தை பிடித்து உள்ளார்கள் என்றால், அவர்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னாலும் ஒவ்வொரு கதை இருக்கும். அவர்களது கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் அவர்களை இந்த இடத்துக்கு உயர்த்தி வைத்து உள்ளது. இதற்காக கல்வி உதவித்தொகை பெறுகின்ற மாணவ-மாணவிகளை பாராட்டுகிறேன்.

ஒவ்வொரு மாணவிக்கும் ஆசை இருக்க வேண்டும். அந்த ஆசை நிறைவேற கடினமாக உழைக்க வேண்டும். நான் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறுவதற்கு கடினமாக படித்தேன். எனக்கு சிறுவயதில் இருந்தே, அதாவது 6-ம் வகுப்பு படிக்கும்போதே கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காக நான் பல புத்தகங்களை படித்தேன். அப்படி அதிகளவில் புத்தகங்கள், பத்திரிகைகள் படித்தது எனக்கு இந்த தேர்வுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இப்போதும் நான் பெண்ணாக இருப்பதால் பணியில் பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதற்கு நான் படித்த பல புத்தகங்கள் அனுபவமாக உள்ளது.

இதேபோல் மாணவிகளாகிய உங்களுக்கு பல சவால்கள் உள்ளன. அதை நீங்கள் தான் எதிர்கொள்ளவேண்டும். அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவிகளாகிய உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அடுத்தவர்கள் கூறுகின்ற யோசனைகளை கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், உங்கள் மனதுக்கு எது நல்லது என்று படுகிறதோ? அந்த முடிவை எடுங்கள்.

நான் இப்படி இருந்தேன், தற்போது எப்படி இருக்கிறேன் என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்கள் தவறுகளை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை விலக்கி விட்டு நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களால் உங்களை சுயமதிப்பீடு செய்ய முடியும்.

நாம் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்றால் அதை பற்றியே சிந்திக்க வேண்டும், அந்த வெற்றியை எப்படி பெற வேண்டும் என்பதற்கான முயற்சியில் இறங்கி கடினமாக உழைக்க வேண்டும். அதற்காக தினமும் பயிற்சி பெற வேண்டும். கடும் முயற்சியும், பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இந்த மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் 90 சதவீத உழைப்பே காரணம். இதற்காக ஆசிரியர்களை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை ‘தினத்தந்தி‘ மேலாளர் த.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். முடிவில், தலைமை ஆசிரியை நாச்சியார் என்ற ஆனந்தபைரவி நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழ் ஆசிரியை ராஜம் தொகுத்து வழங்கினார்.

விழாவில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், நெல்லை தாசில்தார் சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் நாகராஜன், சுகாதார அதிகாரி முருகேசன், சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story