சொத்து குவிப்பு வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில்


சொத்து குவிப்பு வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 5 Nov 2019 4:00 AM IST (Updated: 5 Nov 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

சொத்து குவித்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டுகளும், அவருடைய மனைவிக்கு 3 ஆண்டுகளும் ஜெயில் தண்டனை விதித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 53). இவர் பேட்டையில் உள்ள நெல்லை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி சுற்றுச்சூழல் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தில்லை உமாசாந்தி (47). குமாரவேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குமாரவேல் தனது பெயரில் வீடும், மனைவி தில்லை உமாசாந்தி பெயரில் நிலமும் வாங்கியதும், மகன், மகள் பெயரில் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ததும் என வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ.7 லட்சத்து 70 ஆயிரத்து 938-க்கு சொத்து சேர்த்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கடந்த 17.12.2008 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்கால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

இந்த சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றம் சாட்டப்பட்ட குமாரவேலுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அவருடைய மனைவி தில்லை உமாசாந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, பணியில் இருந்த குமாரவேலை போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு வக்கீலாக சீனிவாசன் ஆஜராகி வாதாடினார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்கால் கூறும்போது, ‘லஞ்ச ஒழிப்பு துறையை பொறுத்தவரையில் புகார் மனு கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தகவல் தெரிந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள்‘ என்றார்.

Next Story