மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த 2 பேர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி
மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த 2 பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்க வந்தனர். சிலர் தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி மண்எண்ணெய், பெட்ரோல், விஷம் போன்றவற்றை கொண்டு வந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று 2 பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். அதன் விவரம் வருமாறு:-
தண்டராம்பட்டு அருகே நாராயணகுப்பம் போந்தை கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது நிலத்திற்கான மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதாகவும் அதனை மாற்றித் தர பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பட்டா மாற்றம் குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சின்னராஜ் நேற்று தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை லாவகமாக பறித்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீசார் கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.
அதேபோல் மேல்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வட்டன். இவர் நிலப்பிரச்சினை தொடர்பாக பலமுறை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கம் முன்பு திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது, போலீசார் அவரை மீட்டு உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்திய கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த 2 சம்பவங்களினால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story