களம்பூர் அருகே சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்: பெட்ரோல் கேன் கொண்டு வந்ததால் பரபரப்பு


களம்பூர் அருகே சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்: பெட்ரோல் கேன் கொண்டு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 3:00 AM IST (Updated: 5 Nov 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

களம்பூர் அருகே சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி,

போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களம்பூரை அடுத்த அரியாத்தூர், வம்பலூர், கூடலூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து போளூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைப்பதாக கூறி சுமார் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு பொக்லைன் எந்திரம் மூலம் ஜல்லிக்கற்களை பெயர்த்தெடுத்தனர். ஆனால் இன்று வரை இந்த சாலை சீரமைக்கப்படவில்லை.

இதுகுறித்து கிராமமக்கள் மாவட்ட கலெக்டர், போளூர் ஊராட்சி ஒன்றியத்திலும், எம்.எல்.ஏ.விடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இப்பாதை வழியாக சென்று வரும் மக்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் இக்கிராமங்களில் வாழும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஆரணி- போளூர் நெடுஞ்சாலையில் வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்டிருந்த ஒரு வாலிபரிடம் பெட்ரோல் கேன் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story