எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ புதிய ஆதாரமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்; இன்று விசாரணை


எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ புதிய ஆதாரமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்; இன்று விசாரணை
x
தினத்தந்தி 5 Nov 2019 12:00 AM GMT (Updated: 4 Nov 2019 8:30 PM GMT)

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் புதிய ஆதாரமாக சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பாவின் ஆடியோவை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது. இதுகுறித்து புதிய அமர்வு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. முதல்-மந்திரியாக ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி இருந்து வந்தார். அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக அக்கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் ‘ரிட்‘ மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

இதற்கிடையே மாஸ்கி, ராஜராஜேஸ்வரி தொகுதிகளின் சட்டசபை தேர்தலில் வேட்பாளர் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இந்த இரு தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 15 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் 11-ந்தேதி தொடங்கும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பா.ஜனதா சார்பில் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் கொடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதற்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதே வேளையில் 15 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, இடைத்தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்- மந்திரி எடியூரப்பா, உப்பள்ளியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ரகசியமாக பேசிய கருத்துகள் அடங்கிய ஆடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அந்த ஆடியோவில், கூட்டணி கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மேற்பார்வையில் மும்பையில் தங்க வைக்கப்பட்டனர். இதில் தனது பங்கு இல்லை. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அதனால் அவர்களுக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்“ என்று எடியூரப்பா பேசியுள்ளார்.

இந்த ஆடியோ ஆதாரத்தை, தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் போது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் அறிவித்து இருந்தார். இந்த விவகாரம் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை விசாரிக்கும் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கர்நாடக காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவை தாக்கல் செய்தார். அவர் பேசுகையில், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு இந்த ஆடியோவை ஆதாரமாக கருத வேண்டும் என்று கோரினார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.வி.ரமணா, “இந்த ஆடியோ குறித்து தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து விசாரணை நடத்த நாளை (அதாவது இன்று) புதிய அமர்வு அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்“ என்றார்.

இதற்கிடையே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று காங்கிரஸ் வக்கீல் தாக்கல் செய்த எடியூரப்பா ஆடியோ குறித்து நாளை (அதாவது இன்று) விசாரணை நடைபெறும் என்றும், இதற்காக நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி புதிய அமர்வு முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) எடியூரப்பா ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடக்க உள்ளது.

இந்த ஆடியோ ஆதார விவகாரம் கர்நாடக பா.ஜனதா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Next Story