கோவில் நிலங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு


கோவில் நிலங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 5 Nov 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

கோவில் நிலங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சேலம்,

இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஸ் குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ராமனிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. அதாவது கோர்ட்டில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கில் கொடுத்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்தில் இதை கூறியுள்ளது. இந்த முடிவு பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்து இந்த முடிவை கைவிட வேண்டும். இதேபோல் கோர்ட்டில் கொடுத்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்ப பெறவேண்டும். மேலும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சொத்துக்களை எக்காரணம் கொண்டும் விற்கவோ, ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா செய்து கொடுக்கவோ கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

20 அம்ச கோரிக்கை

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பெரியசாமி தலைமையில் மாவட்ட தலைவர் மணிவண்ணன், செயலாளர் அருண், முருகேசன் உள்ளிட்டோர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், 8-வது ஊதியக்குழு நிலுவை தொகையை 1.1.2016 முதல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

கால்வாய் வசதி

அழகாபுரம் பெரியபுதூரில் உள்ள முருகன் நகர், ராஜராஜ நகர், அருண் நகர், நியூ அருண் நகர், கண்ணதாசன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கையில் கோரிக்கை அட்டைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் தேங்குவதால் அதில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே தண்ணீர் தேங்காமல் இருக்கவும், சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.


Next Story