மாநிலத்தில் நிலவும் ‘அரசியல் குழப்பத்துக்கு சிவசேனா காரணம் அல்ல’; கவர்னரிடம் சஞ்சய் ராவத் விளக்கம்


மாநிலத்தில் நிலவும் ‘அரசியல் குழப்பத்துக்கு சிவசேனா காரணம் அல்ல’; கவர்னரிடம் சஞ்சய் ராவத் விளக்கம்
x
தினத்தந்தி 5 Nov 2019 6:01 AM IST (Updated: 5 Nov 2019 6:01 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்குசிவசேனா காரணம் அல்ல என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கவர்னரிடம் விளக்கம் அளித்தார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை திடீரென மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., மந்திரி ராம்தாஸ் கதம் ஆகியோர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னருடனான சிவசேனா தலைவர்களின் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்பு குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் பற்றி பேசினோம். புதிய அரசு அமைவதில் ஏற்பட்டு உள்ள குழப்பத்திற்கு சிவசேனா காரணம் அல்ல என கவர்னரிடம் நாங்கள் தெரிவித்தோம். நாங்கள் கூறியதை கவர்னர் பொறுமையுடன் கேட்டார். ஆட்சி அமைக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாக கவர்னர் எங்களிடம் தெரிவித்தார். எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்றும் அவர் எங்களிடம் கூறினார். அவர் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படுவதாக நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். பெரும்பான்மை உள்ளவர்கள் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். புதிய அரசாங்கம் அமைவதில் சிவசேனா எந்த தடையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story