புதன்சந்தை அருகே, உடலில் தின்னர் ஊற்றிக்கொண்டு பீடிபற்ற வைத்த பெயிண்டர் சாவு
புதன்சந்தை அருகே மனைவிக்கு மிரட்டல் விடுப்பதற்காக உடலில் 'தின்னர்' ஊற்றிக்கொண்டு பீடிபற்ற வைத்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள நவமங்கலத்தை சேர்ந்தவர் சவுரிராஜ் (வயது 39). பெயிண்டர். இவரது மனைவி அருள்ஜோதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சவுரிராஜ் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. இதனால் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து உள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து சவுரிராஜ் வீட்டில் இருந்த பெயிண்டிற்கு ஊற்றப்படும் ‘தின்னர்‘ திரவத்தை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.
ஆனால் தீ வைத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து பீடி குடிப்பதற்காக தீயை பற்ற வைத்து உள்ளார். இதில் சவுரிராஜ் உடலில் தீப்பற்றி கொண்டது. உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலன்இன்றி நேற்று முன்தினம் இரவு சவுரிராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story