மது குடிக்க பணம் தராததால், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை
கிருஷ்ணகிரியில் மது குடிக்க பணம் தராததால் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:–
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, ராஜாஜி நகர் 5–வது கிராசைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் சசிக்குமார் (39). தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சசிக்குமார் மது குடிக்க பணம் தேவைப்படும் போதெல்லாம் தனது தந்தையை மிரட்டி பணம் வாங்கி குடித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதே போல நேற்று முன்தினம் இரவும் மது குடிப்பதற்காக தனது தந்தையிடம், சசிக்குமார் பணம் கேட்டுள்ளார். அப்போது தங்கவேல் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி விட்டு தூங்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் குடிபோதையில் அம்மிக்கல்லை எடுத்து தனது தந்தை தங்கவேலின் தலையில் தூக்கி போட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த கொலை குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சசிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான சசிக்குமாருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story