பழிவாங்கும் அரசியலில் ஈடுபடும் எடியூரப்பா - எச்.டி.ரேவண்ணா குற்றச்சாட்டு
முதல்-மந்திரி எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரியாக எடியூரப்பா பொறுப்பேற்றபோது, பழிவாங்கும் அரசியல் செய்ய மாட்டேன் என்று கூறினார். ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எடியூரப்பா குறைத்துவிட்டார். இதன் மூலம் அவர் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூருவில் ஒரு தனியார் நகைக்கடை, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது. இதுதொடர்பாக மாநில அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது. கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்டுறவு தலைமை வங்கியில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரியை பீதருக்கு பணி இடமாற்றம் செய்துள்ளனர்.
கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,600 கோடி நிதிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தடை விதித்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளிடம் இருந்து எங்கள் கட்சி விலகி இருக்கவே விரும்புகிறது. நாடாளுமன்ற தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் திட்டமிட்டு, தேவேகவுடாவை தோற்கடித்தன. அதனால் தேவேகவுடாவுக்கு இழப்பு ஒன்றும் இல்லை. கர்நாடகத்திற்கு தான் நஷ்டம்.
இவ்வாறு எச்.டி.ரேவ ண்ணா கூறினார்.
Related Tags :
Next Story