ஜோலார்பேட்டை அருகே, லால்பாக் எக்ஸ்பிரசில் அடிபட்டு ரெயில்வே ஊழியர் சாவு
ஜோலார்பேட்டை அருகே பாசஞ்சர் ரெயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்து விட்டு திரும்பிய ரெயில்வே ஊழியர் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பலியானார்.
ஜோலார்பேட்டை,
அரக்கோணத்திலிருந்து சேலத்துக்கு தினமும் காலை 4.40 மணியளவில் பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்கிறது. இது தனி என்ஜின் இல்லாத முன்னும் பின்னும் இயக்கக்கூடிய ரெயிலாகும். நேற்று காலை வழக்கம்போல் புறப்பட்டு வாணியம்பாடியை கடந்து 7.45 மணியளவில் கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது ரெயிலில் மின்சாரம் பெறுவதற்காக உயர்அழுத்த மின்கம்பியுடன் உரசிச்செல்லும் ‘பேண்டோகிராப்’ என்ற கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் ரெயிலை இயக்க மின்சாரம் கிடைக்காததால் அந்த இடத்திலேயே ரெயில் நின்றது.
தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில்வே எலக்ட்ரிக்கல் பிரிவு டெக்னீசியன்கள், ஊழியர்கள் குழுவினர் விரைந்து வந்து உடைந்த ‘பேண்டோகிராப்’ கம்பியை கழற்றி விட்டு புதிதாக ‘பேண்டோகிராப்’ கம்பியை பொறுத்தி சரி செய்தனர். இதனை தொடர்ந்து 1¼ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் காக்கிநாடா-பெங்களூரு எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
கோளாறு ஏற்பட்ட ரெயிலில் சரி செய்யும் பணியில் சீனியர் டெக்னீசியனான ஜோலார்பேட்டை புதுஓட்டல் பகுதியை சேர்ந்த கோபிநாத் (வயது 40) என்பவரும் ஈடுபட்டிருந்தார். அவர் தனது மோட்டார்சைக்கிளை கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
பாசஞ்சர் ரெயில் சென்ற தண்டவாளத்தின் அருகிலேயே எதிர்மார்க்கத்தில் காட்பாடி நோக்கி செல்லும் தண்டவாளம் உள்ளது. அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில்தான் கேத்தாண்டபட்டி ரெயில்வே கேட்டும் உள்ளது. ரெயில் சென்றபின் உடைந்த ‘பேண்டோகிராப்’ கம்பியை கோபிநாத் கழற்றிக்கொண்டு கேத்தாண்டபட்டி ரெயில்வே கேட் அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக காட்பாடி நோக்கி செல்லும் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் வந்தது. அந்த ரெயிலில் அடிபட்ட கோபிநாத் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து வந்து கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த கோபிநாத்துக்கு உமா என்கிற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உடலைப்பார்த்து அவர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story