1,154 பயணிகள், 407 ஊழியர்களுடன் சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூரு வருகை


1,154 பயணிகள், 407 ஊழியர்களுடன் சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூரு வருகை
x
தினத்தந்தி 6 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

1,154 சுற்றுலா பயணிகள், 407 ஊழியர்களுடன் துபாயில் இருந்து சுற்றுலா சொகுசு கப்பல் ஒன்று மங்களூருவுக்கு வந்துள்ளது.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மங்களூரு புதிய துறைமுகம் அமைந்துள்ளது. கடந்த வருடம் இந்த துறைமுகம் பல்வேறு பெரிய கப்பல்களை கையாளும் வகையில் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து 1,154 சுற்றுலா பயணிகள், 407 ஊழியர்களுடன் ஏ.ஐ.டி. அவிதா எனும் பெயர் கொண்ட சுற்றுலா சொகுசு கப்பல் ஒன்று கோவா கடல் வழியாக மங்களூரு புதிய துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

மங்களூருவுக்கு வந்த அவர்களுக்கு துறைமுகத்தில் கர்நாடக பாரம்பரிய உடை அணிந்து கலைஞர்கள் புடைசூழ துறைமுக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இதுபற்றி துறைமுக தலைவர் ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த 1,154 சுற்றுலா பயணிகளுடனும், 407 ஊழியர்களுடனும் துபாயில் இருந்து சுற்றுலா சொகுசு கப்பல் ஒன்று மங்களூரு புதிய துறைமுகத்திற்கு வந்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மங்களூரு துறைமுகத்தில் டிஜிட்டல் வழிகாட்டி, இலவச வை-பை வசதி உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் மங்களூரு துறைமுகத்தில் இருந்து முதல் முறையாக ‘ஹெலி-டூரிசம்‘ எனும் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா பயணிகளை, சுற்றுலா தலங் களுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை தொடங்கி உள்ளோம்.

அதில் தற்போது மங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பேகல் மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இனி வரும் காலங்களில் தர்மஸ்தலா, குக்கே, பேளூர், ஹலேபீடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

தற்போது 5 பேர் மட்டுமே பயணிக்க கூடிய ஹெலிகாப்டர் சேவையில் உள்ளது. விரைவில் 16 பேர் பயணிக்க கூடிய ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மேலும் மங்களூருவில் இருந்து அருகாமையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆட்டோக்கள் வசதியும் உள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மங்களூருவில் தங்கி சுற்றுலா தலங்களை எளிதில் சுற்றிப்பார்க்க முடியும்.

வருகிற 12-ந் தேதி இன்னொரு சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூருவுக்கு வர உள்ளது. அதில் பயணித்து வரும் சுற்றுலா பயணிகள் 16 பேர் ஏற்கனவே ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இது கப்பல் சீசன் ஆகும்.

இப்போது முதல் அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதத்திற்குள் மங்களூருவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் 24 சுற்றுலா சொகுசு கப்பல்கள் வர உள்ளன. அதன்மூலம் ரூ.4.80 கோடி மங்களூரு துறைமுகத்திற்கு வருமானம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story