மனைகளுக்கு அங்கீகாரம் வழங்க, ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வடலூர் பேரூராட்சி அதிகாரி கைது


மனைகளுக்கு அங்கீகாரம் வழங்க, ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வடலூர் பேரூராட்சி அதிகாரி கைது
x
தினத்தந்தி 6 Nov 2019 3:45 AM IST (Updated: 6 Nov 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

மனைகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வடலூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

வடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூர் பஸ் நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு நிர்வாக அதிகாரியாக சக்கரவர்த்தி(வயது 55) என்பவர் பணியாற்றி வருகிறார். வடலூரை சேர்ந்த இவர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலக பணிகளையும் பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் சமீபத்தில் 25 சென்ட் நிலத்தை(5 பிளாட்) வாங்கினார். அதில் வீடு கட்டுவதற்கு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி வடலூர் பேரூராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது நிர்வாக அதிகாரி சக்கரவர்த்தி ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் அங்கீகாரம் வழங்கப்படும் என்றார்.

உடனே மோகன்தாஸ், அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது எனவே சற்று குறைத்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை குறைத்து ரூ.25 ஆயிரம் தருமாறு சக்கரவர்த்தி கேட்டார். பின்னர் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக கூறி சென்ற மோகன்தாஸ் இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி மோகன்தாஸ் நேற்று காலையில் வடலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த நிர்வாக அதிகாரி சக்கரவர்த்தியிடம் போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்பின்ராஜாசிங், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம், மாலா மற்றும் போலீசார், லஞ்சம் வாங்கிய சக்கரவர்த்தியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அப்போது சக்கரவர்த்திக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு டாக்டர் வரவழைக்கப்பட்டு, சக்கரவர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு சக்கரவர்த்தி, கடலூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவரை கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story