வண்டலூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக்கொலை போலீசார் விசாரணை


வண்டலூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Nov 2019 11:15 PM GMT (Updated: 2019-11-06T01:17:57+05:30)

வண்டலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை, அவரது நண்பரே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 19). பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். வேங்கடமங்களம் பார்கவி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன்களான விஜய், உதயா, ஆகியோர் முகேசின் நண்பர்கள்.

நேற்று மதியம் மாணவர் முகேஷ் தனது நண்பரான விஜயை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். வீட்டின் வெளியே இருந்த உதயாவிடம் விஜய் எங்கே என கேட்க, விஜய் வீட்டின் உள்ளே அவரது அறையில் உள்ளார் என உதயா கூறியுள்ளார்.

விஜய் இருந்த அறைக்கு முகேஷ் சென்றார். இருவரும் இருந்த அறையில் இருந்து திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. இதைகேட்ட வெளியில் இருந்த விஜயின் தம்பி உதயா அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரது நெற்றியில் குண்டு துளைத்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. இதை பார்த்த விஜய் ‘தெரியாமல் சுட்டுவிட்டேன்’ என்று கூறிவிட்டு துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

மாணவர் சாவு

செய்வதறியாது திகைத்த உதயா சத்தம் போட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முகேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் முகேசை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்

சமீப காலமாக வண்டலூர், செங்கல்பட்டு, வேங்கடமங்களம், கேளம்பாக்கம் பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மூலமாக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாசாரம் பரவிவருகிறது. ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கிகளை வினியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

வட மாநிலத்தவர்களிடம் விஜய்க்கு பழக்கம் ஏற்பட்டு அவர்களிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி வீட்டுக்கு எடுத்து சென்று சுடுவதற்கு பழகியபோது வெடித்ததா? அல்லது நெற்றி பொட்டில் வைத்து விளையாட்டாக அழுத்திய போது தவறுதலாக வெடித்து விட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விஜயின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதால் அவர் தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார். அதனை தெரியாத்தனமாக எடுத்து வந்து சுட்டதில் விளையாட்டு வினையானதா? அல்லது காதல் விவகாரத்தில் முகேஷ் சுடப்பட்டாரா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story