மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து - நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து நெல்லையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனிநாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜேஷ்முருகன் வரவேற்று பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அழிந்து வருகின்றன 30 லட்சம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். பொருளாதார கொள்கையால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாடு வளர்ச்சி பாதையில் இருந்து பின்நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
பா.ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு பெரும்பான்மையாக இருப்பதால், அனைத்து மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படுகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான அரசு நடைபெற்ற இடைத்தேர்தலில் பணத்தால் வெற்றி பெற்றது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், நெல்லை கிழக்கு மாவட்ட சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில துணை தலைவர் காமராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மோகன்குமாரராஜா, தமிழ்செல்வன், சுந்தரராஜ பெருமாள், கட்சி நிர்வாகிகள் முரளிராஜா, யோபு, டியூக்துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story