ஏ.சி. எந்திரம் வெடித்ததால், காரில் தீப்பிடித்து புதுமாப்பிள்ளை உடல் கருகி சாவு - புதுச்சேரியில் பரிதாபம்


ஏ.சி. எந்திரம் வெடித்ததால், காரில் தீப்பிடித்து புதுமாப்பிள்ளை உடல் கருகி சாவு - புதுச்சேரியில் பரிதாபம்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:30 PM GMT (Updated: 5 Nov 2019 8:13 PM GMT)

புதுச்சேரியில் ஏ.சி. எந்திரம் வெடித்ததால் காரில் தீப்பிடித்து புதுமாப்பிள்ளை உடல் கருகி பிணமானார்.

புதுச்சேரி,

புதுவை உழந்தைகீரப்பாளையம் அய்யனார்கோவில் வீதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் முத்துக்குமரன் (வயது 32). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று காலை சவாரிக்கு செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்தார்.

காரை கிளப்புவதற்கு முன் கதவு கண்ணாடிகளை ஏற்றிவிட்டு ஏ.சி. எந்திரத்தை இயக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் குபீரென தீப்பிடித்து உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமரன் காரில் இருந்து வெளியேறுவதற்காக கதவினை திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் திறக்க முடியவில்லை. இதனால் உள்ளேயே அவர் சிக்கிக் கொண்டார்.

எவ்வளவோ போராடி பார்த்தும் முத்துக்குமரனால் காரை விட்டு வெளியே வர முடியாமல் போனது. இதனால் காரில் பிடித்த தீ அவர் மீதும் பற்றி எரிந்தது. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்போதுதான் காருக்குள் முத்துக்குமரன் உயிருக்கு போராடுவது தெரியவந்தது. உடனடியாக கார் கண்ணாடிகளை உடைத்து அவரை மீட்க முயற்சித்தனர்.

இதற்கிடையே தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் அங்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் முத்துக்குமரனை தீயில் கருகிய நிலையில் பிணமாகத்தான் அவர்களால் மீட்க முடிந்தது. உடனடியாக அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் ஏ.சி. எந்திரத்தில் இருந்து கியாஸ் கசிந்ததில் வெடித்து தீப்பிடித்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. காரில் தீப்பிடித்ததற்கு வேறு காரணம் ஏதும் இருக்குமா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story