இருளர் குடியிருப்பில் கலெக்டர் அருண் ஆய்வு - வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை


இருளர் குடியிருப்பில் கலெக்டர் அருண் ஆய்வு - வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2019 10:30 PM GMT (Updated: 5 Nov 2019 8:36 PM GMT)

இருளன்சந்தை கிராமத்தில் ஆய்வு செய்த கலெக்டர் அருண், இருளர் இன மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பாகூர், 

பாகூர் தொகுதிக்கு உட்பட்ட இருளன்சந்தை கிராமத்தில் இருளர் இன மக்கள் பல ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களில், 25 குடும்பங்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அந்த பகுதியில் மனைப்பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மனைபட்டாவிற்கான எல்லைகளை அளந்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

அதன்பேரில் புதுச்சேரி கலெக்டர் அருண் தலைமையில் வில்லியனூர் சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், நில அளவை பதிவேடுகள் துறை இயக்குனர் உதயகுமார், தாசில்தார்கள் கார்த்திகேயன், குமரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று இருளர் குடியிருப்புக்கு சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் இருளர் இன மக்களிடம் கலெக்டர் குறைகேட்டார். அப்போது அவர்கள், தங்களுக்கு வழங்கிய பட்டா இடத்தில் வீடு கட்டி கொடுக்கவேண்டும், பலருக்கு குடும்ப அட்டையும், பிறப்பு சான்றிதழ்களும் இல்லாதால் அரசின் சலுகைகளை பெற முடியவில்லை, சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

மேலும் இருளர் குடியிருப்பு பகுதியில் வீடுகள், பொது கழிப்பிடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது குடியிருப்பு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதன்பின்னர் அங்கிருந்த நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்ட கலெக்டர், அதில் படிந்திருந்த மண்ணை சுத்தப்படுத்துமாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story