100 நாட்களில் அக்னி பரீட்சையை எதிர்கொண்டேன்; சாதனை கையேட்டை வெளியிட்டு எடியூரப்பா பேட்டி


100 நாட்களில் அக்னி பரீட்சையை எதிர்கொண்டேன்; சாதனை கையேட்டை வெளியிட்டு எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 6 Nov 2019 12:15 AM GMT (Updated: 5 Nov 2019 8:41 PM GMT)

கர்நாடகத்தில் நான் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களில் அக்னி பரீட்சையை எதிர்கொண்டேன், இனி மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்துவேன் என்று சாதனை கையேட்டை வெளியிட்டு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை தாண்டிவிட்டது. இதையடுத்து இந்த 100 நாட்களில் மாநில அரசின் சாதனைகள் குறித்த கையேட்டை எடியூரப்பா நேற்று பெங்களூரு விதான சவுதாவில் வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 100 நாட்கள் ஆகிறது. இதில் வட கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. நாங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியுள்ளோம். வெள்ளத்தின்போது, மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கியது. முதல்கட்டமாக ரூ.1,200 கோடி நிதி வழங்கியது.

பிரதமர் சம்மான் திட்டத்தின் கீழ் மாநில அரசு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குகிறது. மாநில அரசின் நிதி நிலை நன்றாக உள்ளது. வரி வசூல் திருப்திகரமாக இருக்கிறது. வரி வசூலில் இதுவரை இலக்கை எட்டியுள்ளோம். கலசா-பண்டூரி திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெற்றுள்ளோம். நீர்ப்பாசனத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளோம்.

கல்வித்துறையில் தரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ஹாவேரி, யாதகிரியில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு 60 சதவீத நிதி உதவியை வழங்குகிறது. பெங்களூருவில் ஒரு லட்சம் வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான பிரிவில் 51 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடித்து ரத்து செய்துள்ளோம். மின் உற்பத்தியில் கர்நாடகம் தன்னிறைவு அடைந்துள்ளது. கலபுரகி விமான நிலையம் அமைக்கப்பட்டு, விமான போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இந்த விமான நிலையத்தில் விமான போக்குவரத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.

பெங்களூரு புறநகர் ரெயில் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 100 நாட்களில் ஒரு நாள் கூட ஓய்வு எடுக் காமல் மக்கள் பணியாற்றியுள்ளேன். இந்த 100 நாட்களில் அக்னி பரீட்சையை எதிர்கொண்டுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியான நாட்களாக இருக்கவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்வது என்பது பெரும் சவாலாக இருந்தது. அதை நாங்கள் வெற்றிகரமாக கையாண்டுள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதில் கவனம் செலுத்துவோம். குறிப்பாக பெங்களூருவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

100 நாட்களை கடந்த எனது ஆட்சிக்கு நான் மதிப்பெண் கொடுத்தால் நன்றாக இருக்காது. மக்கள் தான் இதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும். பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். மதுபான விற்பனைக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை. குடிசைகளை அகற்றும் விதமாக குடிசை மாற்று வாரியம் மூலம் 20 ஆயிரம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்னையும், எனது அரசை பற்றியும் விமர்சித்து வரும் சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த பேட்டியின்போது, துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சட்டத்துறை மந்திரி மாதுசாமி, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மந்திரி சி.சி.பட்டீல், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story