ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2,586 பேருக்கு காவலர் உடல்தகுதி தேர்வு இன்று தொடங்குகிறது


ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2,586 பேருக்கு காவலர் உடல்தகுதி தேர்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 2,586 பேருக்கு 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு ராமநாதபுரத்தில் இன்று தொடங்குகிறது.

ராமநாதபுரம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் 2,465 இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் என மொத்தம் 8,826 பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி நடைபெற்றது.

இந்த தேர்வில் வெற்றி பெற்ற வர்களுக்கான உடல்தகுதி தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான தனித்திறன் மற்றும் உடல்தகுதி தேர்வு சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

கட்டுப்பாடு

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,119 ஆண்கள், 309 பெண்கள் உள்பட 1,428 பேரும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 911 ஆண்களும், 247 பெண்களும் என மொத்தம் 1158 பேர் இந்த தேர்வில் கலந்து கொள்கின்றனர். ஆக மொத்தம் 2 மாவட்டங்களையும் சேர்த்து 2,030 ஆண்களும், 556 பெண்களும் என 2,586 பேர் உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் கலந்து கொள்ள வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன் கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பயிற்சி எடுத்த நிறுவனத்தின் பெயர் உள்ளிட்டவைகளுடன் கூடிய உடைகள் அணிந்து வரக்கூடாது.

எந்த ஒரு அடையாளம் பொரித்த உடைகளும் அணிந்து வர அனுமதி கிடையாது.

சிறப்பு பார்வையாளர்

முதல் நாளான இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆண்களுக்கும், நாளை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆண்களுக்கும், 8-ந்தேதி 2 மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கும் தேர்வு நடைபெறும். தனித்திறன் மற்றும் உடல்தகுதி தேர்வினை சிறப்பு பார்வையாளரான பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.முருகன் தலைமையில் டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா உள்ளிட்டோர் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story