மராட்டியத்தில் மாற்று ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு தேசியவாத காங். நிபந்தனை
மராட்டியத்தில் மாற்று அரசு அமைக்க வேண்டுமானால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா முதலில் வெளியேற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் பகிரங்கமாக நிபந்தனை விதித்தது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வென்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் தகுதியை பெற்றன.
தேர்தல் முடிவை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. அதற்கு உடன்பட பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்து விட்டது.
முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ள சம்மதிக்காவிட்டால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் என 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என பாரதீய ஜனதாவுக்கு சிவசேனா அதிர்ச்சி கொடுத்தது.
பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் பிடிவாதம் காரணமாக தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு வாரங்களாகியும் புதிய அரசு அமைவதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில் நேற்றுமுன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் பாரதீய ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மந்திரி ராம்தாஸ் கதம் ஆகியோர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். அடுத்தடுத்து நடந்த தலைவர்களின் சந்திப்பின் காரணமாக புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்டு உள்ள குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் என கருதப்பட்டது. ஆனால் ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்தவொரு தெளிவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் மவுனம் காத்து வந்த அரசியல் கட்சியினர் நேற்று பகிரங்கமாக பேசத் தொடங்கினர். குறிப்பாக மாற்று ஆட்சி அமைவதற்கு சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் அதிரடி நிபந்தனை விதித்தது. அதன்படி மாற்று அரசு அமைய சிவசேனா விரும்பினால் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முதலில் வெளியேற வேண்டும் என கூறியது.
இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-
சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியை வழங்க பாரதீய ஜனதா முன்வந்தால் பிரச்சினை இல்லை. அவ்வாறு வழங்க மறுத்தால், மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது. அதற்கு பாரதீய ஜனதா மற்றும் அந்த கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இனி உறவு இல்லை என சிவசேனா அறிவிக்க வேண்டும். மத்திய மந்திரி பதவி வகிக்கும் சிவசேனாவின் அரவிந்த் சாவந்த்தும் பதவி விலக வேண்டும். அதன் பின்னர் தான் மாற்று ஆட்சிக்கு தேசியவாத காங்கிரசின் கதவு திறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பகிரங்க நிபந்தனை சிவசேனாவின் மாற்று ஆட்சி முயற்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாரதீய ஜனதா அறிவித்தது.
ஆனால் சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்-மந்திரி என அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்றும் திட்டவட்டமாக கூறினார்.
சட்டசபையின் பதவி காலம் வருகிற 9-ந் தேதி நிறைவு பெறுவதால், இன்னும் ஓரிரு நாட்களில் மராட்டியத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
Related Tags :
Next Story