வேலூர் நேதாஜி மைதானத்தில் இரண்டாம்நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது
சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம்நிலை காவலர் பணிக்கான தேர்வில் தேர்ச்சிபெற்ற வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.
வேலூர்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 753 ஆண்கள், 2 ஆயிரத்து 338 பெண்கள் என மொத்தம் 5,091 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற வேலூர்- திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உடல்தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆண்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 9-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
இதில் ஒருநாளைக்கு 900 பேர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வின் முதல்நாளான நேற்று ஐ.ஜி. சாரங்கன் தலைமையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பின்னர் உயரம், மார்பளவு, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடந்தது.
இந்த தேர்வையொட்டி முறைகேடுகளை தவிர்க்க சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு சரிபார்ப்பு, ஓட்டம் நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு 10-ந் தேதி முதல் 12-ந் தேதிவரை நடக்கிறது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயக்குமார், வனிதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story