விழுப்புரத்தில், 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது - ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டார்
விழுப்புரத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது. இதனை ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டார்.
விழுப்புரம்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2,465 இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலை காவலர்கள் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 208 சிறை காவலர்கள், 191 தீயணைப்பு வீரர்கள் என 8,826 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 3 லட்சம் பேர் எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாகியது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2,631 ஆண்களும், 916 பெண்களும், ஒரு திருநங்கையும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 1,690 ஆண்களும், 649 பெண்களும் ஆக மொத்தம் 5,887 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கான உடல்தகுதி தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக எழுத்து தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் அழைப்பாணை கடித்துடன் அதிகாலை 5 மணி முதலே காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்திற்கு வரத்தொடங்கினர். அவர்களின் அழைப்பாணை கடிதத்தை போலீசார் சரிபார்த்து தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சரியாக காலை 6 மணிக்கு உடல்தகுதி தேர்வு தொடங்கியது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 832 பேர் கலந்து கொண்டனர், அழைப்பாணை கடிதம் அனுப்பப்பட்டவர்களில் 68 பேர் வரவில்லை.
முதலாவதாக அவர்களின் உயரம் சரிபார்க்கப்பட்டது. இதில் பொது பிரிவினர் 170 செ.மீட்டரும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 167 செ.மீட்டரும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உயரம் சரிபார்க்கப்பட்டது. இதில் உயரம் குறைவாக இருந்த 76 பேர் தகுதி இழந்தனர்.
இதனை தொடர்ந்து 756 பேருக்கும் மார்பு அளவு சரிபார்க்கப்பட்டது. இதில் அனைத்து பிரிவினருக்கும் சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீட்டரும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 745 பேர் தகுதி பெற்றனர். 11 பேர் தகுதி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து 745 பேருக்கும் 1,500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதனை 7 நிமிடத்திற்குள் கடக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 698 பேர் தேர்ச்சி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். 47 பேர் ஓட்டத்தில் தகுதி பெறாமல் வெளியேற்றப்பட்டனர். இந்த உடல்தகுதி தேர்வை காவல்துறை தலைமையிட ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டார். அப்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்புத்துறை, சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இத்தேர்வு தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story