தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் கோரையாறு அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டுகோள்


தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் கோரையாறு அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Nov 2019 4:00 AM IST (Updated: 7 Nov 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் கோரையாறு அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக இருப்பது பச்சைமலை. தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பச்சைமலை பெரம்பலூர், திருச்சி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களை பசுமையால் ஒன்றிணைக்கும் பாலம் போல திகழ்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த பச்சைமலை அடிவாரத்தில் உள்ள “எட்டெருமை பாலி‘ என்றழைக்கப்படும் கோரையாறு அருவி (நீர்வீழ்ச்சி) அமைந்துள்ளது.

சுமார் 30 அடி உயரத்தில் இருந்து மலை உச்சியிலிருந்து மூலிகை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட கிணறு போன்ற நீர் தேக்கமும் உள்ளது. இதனால், கோரையாறு அருவியில் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சென்று குளிக்க முடியும். இந்த அருவியில், சாதாரண மழைபெய்தால் கூட நீர் கொட்டுகிறது. குறிப்பாக அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கி, நவம்பர், டிசம்பர் மாதங்களே கோரையாறு அருவியின் சீசன் நாட்களாகும். இந்த ஆண்டும் அக்டோபர் மாத இறுதியிலேயே அருவியில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது.

பயணிகள் வருகை அதிகரிப்பு

இதனால், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இந்த அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை வருடுவது போல குளிர்ச்சியான தென்றல் காற்று, அவ்வப்போது உலா வரும் மேகக் கூட்டங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகள் வருகைக்கு காரணம். கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்த அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் அருவியின் அழகை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.

இந்த அருவியில் கொட்டு தண்ணீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது. இந்த அருவிக்கு செல்ல பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக தொண்டமாந்துறைக்கு சென்று, அங்கிருந்து விஜயபுரம், அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரத்திலுள்ள கோரையாறு கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கோரையாறு கிராமம் வரை அரசு டவுன் பஸ் செல்கிறது. கார், மோட்டார் சைக்கிள்களிலும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அதன்பிறகு கோரையாறு கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, இடையிலுள்ள ஆற்றை கடந்து, அதன்பிறகு 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

சுற்றுலா தலமாக்க...

அங்கு உயரத்திலிருந்து கருங்கல் பாறைகள் சூழ்ந்த குளத்திற்குள் ஆர்ப்பரித்தபடி அருவி நீர் கொட்டுவதை கண்டால் உள்ளம் கொள்ளை போகும். ஆனால் சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்த கோரையாறு அருவி இதுவரைக்கும் சுற்றுலா தலமாக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ரஞ்சன்குடிகோட்டை, சாத்தனூர் கல்மரம் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சுற்றுலா தலங்கள் உள்ளன. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கோரையாறு அருவியை தமிழக சுற்றுலா தலங்களின் பட்டியலில் இடம்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story