கன்னியாகுமரியில் சீசன் கடைகளை ஏலம் எடுக்காமல் புறக்கணித்த வியாபாரிகள் 274 கடைகளில் 4 மட்டும் ஏலம் போனது


கன்னியாகுமரியில் சீசன் கடைகளை ஏலம் எடுக்காமல் புறக்கணித்த வியாபாரிகள் 274 கடைகளில் 4 மட்டும் ஏலம் போனது
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 8:08 PM GMT)

கன்னியாகுமரியில் சீசன் கடைகளை ஏலம் எடுக்காமல் வியாபாரிகள் புறக்கணித்தனர். இதனால் 274 கடைகளில் 4 கடைகள் மட்டுமே ஏலம் போனது.

கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் முக்கிய சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த காலங்களில் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்திருக்கும். இதனால் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதுவது வழக்கம். அப்போது சீசன் கடைகள் கன்னியாகுமரியில் கூடுதலாக அமைக்கப்படும். இந்த கடைகளை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படும்.

இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் முதல் 60 நாட்கள் கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

கடைகள் ஏலம்

இந்த நிலையில் சீசன் கடைகளுக்கான ஏலம் நேற்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் விடப்பட்டது. இந்த ஏலம் விடும் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் மயில் தலைமை தாங்கினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னா, பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர்கள் சண்முக சுந்தரம், ஏசுதாஸ், சுகாதார அதிகாரி முருகன் மற்றும் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் 250 கடைகள், சன்னதி தெருவில் 24 கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது. தற்காலிக சீசன் கடைகளை ஏலம் எடுப்பதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் என ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆனால் 274 கடைகளில் 4 கடைகள் மட்டும் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 206-க்கு ஏலம் போனது. மற்ற கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை. இந்த கடைகளை ஏலம் எடுக்காமல் வியாபாரிகள் புறக்கணித்தனர்.

270 கடைகள் ஏலம் போகாததால், மறு ஏலம் வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாபாரிகள் புறக்கணிப்பு

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக சீசன் காலங்களில் 650-க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் விடப்படும். ஆனால் தற்போது கோர்ட்டு உத்தரவு மற்றும் சில காரணங்களால் கடைகளின் எண்ணிக்கையை பேரூராட்சி நிர்வாகம் குறைத்துள்ளது. மேலும் தற்போதைய கடைகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தான் கடைகளை ஏலம் எடுக்காமல் புறக்கணித்தோம் என தெரிவித்தனர்.

ஏலம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவு படி பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் ஏலம் விடப்படுகிறது. தற்போது கடைகளின் அளவு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு ஏலம் விடப்படுகிறது. 274 கடைகளில் 4 கடைகளை மட்டும் வியாபாரிகள் ஏலம் எடுத்துள்ளனர். மேலும் கழிவறை கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலமும் போகவில்லை என்றனர்.

சீசன் கடைகள் ஏலத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.


Next Story