பிரதமரின் வெளிநாட்டு பயணம் பெரும் முதலாளிகளுக்கே பயன்படுகிறது - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு
பிரதமரின் வெளிநாட்டு பயணம் அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கே பயன்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் குற்றம் சாட்டினார்.
விருதுநகர்,
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து சாத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான சஞ்சய்தத், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மகிளா ஜெயக்குமார் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய் பாண்டியன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் கருப்பசாமி மற்றும் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி இதுவரை எதுவும் போடவில்லை. நாடு சுதந்திரம் அடைந்தாலும் தற்போது பா.ஜ.க. ஆட்சியில் மக்களின் சுதந்திரம் பறிபோகிறது. பிரதமர் வெளிநாடு செல்வதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார். ஆனால் அவரது வெளிநாட்டு பயணம் நாட்டு மக்களுக்கு பயன்படுவதில்லை. அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கே பயன்படுகிறது. நாட்டின் வளர்ச்சி சதவீதம் குறைந்து விட்டது. அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு பாதித்து விட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பிரதமரின் தாளத்திற்கும், பாட்டிற்கும் ஏற்ப செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வினர் முறைகேடாக சம்பாதித்த பணத்தை கொண்டு தேர்தலில் வெற்றி பெற நினைக்கின்றனர். மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.
நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.
காங்கிரஸ் வட்டார தலைவர்களும், நகர தலைவர்களும், தொண்டர்களும் கிராம மக்களை சந்தித்து நாட்டு மக்களுக்காக காங்கிரஸ் பாடுபடுவதை எடுத்து சொல்லி வரவிருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story