வெண்மணி கிராமத்தில் சாலை விரிவாக்கத்துக்காக விநாயகர் கோவிலை இடித்து இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
போளூர் அருகே வெண்மணி கிராமத்தில் சாலை விரிவாக்கத்துக்காக விநாயகர் கோவிலை இடித்து இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மாற்றுப்பாதை அமைக்க கேட்டுக்கொண்டனர்.
போளூர்,
செய்யூர்-வந்தவாசி -போளூர் சாலையை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்யும் பணி ‘ஆசியன் வங்கி’ நிதியுதவியுடன் செயல்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதையொட்டி நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்கப்பணி எல்லைக்குள் போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. எனவே இக்கோவிலை இடித்து வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவிலை மாற்றி அமைக்க தேவையான இழப்பீடு தொகை மதிப்பீட்டை தெரிவிக்குமாறு விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு, நெடுஞ்சாலைத்துறை வந்தவாசி கோட்ட பொறியாளர் உத்தண்டி கடிதம் அனுப்பி இருந்தார்.
இது தொடர்பாக கோவில் செயல்அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் நேற்று கோவில் வளாகத்தில் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுரேஷ், சவுந்தர்ராஜன், பா.ஜ.க.நிர்வாகிகள் வெங்கடேசன், ரமேஷ், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், போளூர் ஒன்றியக் குழு முன்னாள் கவுன்சிலர் கீதாகணேஷ் மற்றும் வெண்மணி மற்றும் போளூர் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு கோவிலை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், “300 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற இந்த கோவிலில் பலர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாலை அமைக்க கோவிலின் இடதுபுறம் சுமார் 100 அடிக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதை பயன்படுத்தலாம். எனவே கோவிலை இடிக்காமல் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story