வீட்டுமனை தகராறில், அண்ணியை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே வீட்டுமனை தகராறில் அண்ணியை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் குழந்தைவேல் (வயது 32). இவருடைய மனைவி சிவா(30). இவர்களுக்கு ஹரிகரன்(11), ஆகாஷ்(9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். குழந்தைவேலின் தம்பியான தொழிலாளி ஆறுமுகம்(28), தாயார் சரோஜாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
ஆறுமுகத்தின் வீடு முன்புறமும், குழந்தைவேலின் வீடு பின்புறமும் உள்ளது. இதனால் ஆறுமுகத்துக்கும், சிவாவுக்கும் இடையே வீட்டுமனை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை இவர்களுக்கிடையே முன்விரோதம் காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட் டது. இதை பார்த்த குழந்தைவேல், அவர்களை விலக்கி விட்டார்.
பின்னர் குழந்தைவேலும், சிவாவும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். மதியம் சாப்பாட்டிற்காக சிவா மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது வீட்டின் முன்புள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அவருக்கும் அங்கு நின்று கொண்டிருந்த ஆறுமுகத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், அண்ணி என்றும் எண்ணாமல் தனது கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சிவாவை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதில் சிவா இறந்து விட்டதாக எண்ணிய ஆறுமுகம், அண்ணியை கொலை செய்ததால் தன்னை உறவினர்கள் கொன்று விடுவார்களே என்று நினைத்தார். பின்னர் அவர் தனது வீட்டுக்கு சென்று, அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிவா மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்று விட்டு, தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story