முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு தேவேகவுடா பாராட்டு “அவர் எனது எதிரி அல்ல”
முதல்-மந்திரி எடியூரப்பாவை பாராட்டியுள்ள தேவேகவுடா, அவர் எனது எதிரி அல்ல என்று கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
யாதகிரியில் எங்கள் கட்சியின் நிர்வாகியை ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினேன். நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 15-ந் தேதி எடியூரப்பா வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்தேன்.
இந்த நிலையில் யாதகிரி சப்-இன்ஸ்பெக்டரை எடியூரப்பா பணி இடமாற்றம் செய்துள்ளார். முதல்-மந்திரியாக இருக்கும் எடியூரப்பா, மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள், குழந்தைகள் என யார் மீதும் போலீசார் தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது.
சப்-இன்ஸ்பெக்டரை பணி இடமாற்றம் செய்த எடியூரப்பாவின் நடவடிக்கையை பாராட்டுகிறேன். தனக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக எண்ணி எங்கள் கட்சி நிர்வாகி பெருமைபடக்கூடாது. தொகுதியில் அமைதியை நிலைநாட்டி கொண்டு கட்சி பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த சப்-இன்ஸ்பெக்டரும் தான் செய்த தவறை உணர்ந்துள்ளார்.
எடியூரப்பாவை தொடர்பு கொண்டு நான் பேசவில்லை. அவ்வாறு வெளியான தகவலில் உண்மை இல்லை. அவரிடம் பேசக்கூடாது என்று எதுவும் இல்லை. ஆனால் பேசக்கூடிய சந்தர்ப்பம் வரவில்லை. அவர் எனது எதிரி அல்ல. சட்டசபைக்கு எப்போது தேர்தல் வரும் என்று எனக்கு தெரியாது. நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். இந்த சூழ்நிலையில் நான் எடியூரப்பாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும், சித்தராமையாவை எதிர்ப்பதாகவும் கூறுவது சரியல்ல. மராட்டிய மாநிலத்தில் என்ன நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்று சொல்ல முடியாது. தீர்ப்பு வெளியாகும் நிலையில் எடியூரப்பாவின் ஆடியோ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு புத்தக திருவிழாவுக்கு இடம் பெறுவது தொடர்பாக எடியூரப்பாவிடம் பேச முயற்சி செய்தேன். அது சாத்தியமாகவில்லை. அவரது அதிகாரிகளிடம் இதுபற்றி பேசினேன்.
அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. தேவராஜ் அர்ஸ் அளவுக்கு சித்தராமையா வளர முடியாது. கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடந்து, மீண்டும் தொங்கு சட்டசபை ஏற்பட்டால், நாங்கள் என்ன முடிவு எடுப்போம் என்பதை இப்போதே சொல்ல முடியுமா?.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story