திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் தாய் சேய் நலக்கட்டிடம் - காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நலக்கட்டிடத்தை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
திருப்பூர்,
திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் 200 படுக்கைகள் கொண்ட தாய் சேய் நலக்கட்டிடம் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்திற்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் பிரசவ பிரிவு, பேறுகால முன்கவனிப்பு, பேறுகால பின்கவனிப்பு, அறுவை சிகிச்சை அரங்கு, பச்சிளங்குழந்தை சிறப்பு கவனிப்பு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது. தாய் மற்றும் குழந்தைகள் பிரிவு ஒரே கட்டிடத்தில் செயல்படும் என்பதால் சிகிச்சைக்கு வருபவர்கள் பயன்பெறுவார்கள்.
இதுபோல் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ரூ.1 கோடி மதிப்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மனநலம் குன்றிய குழந்தைகள், குழந்தைகளின் தொடக்க நிலை நோய்கள், பல் வியாதி, காது கேட்கும் திறன், கண் பார்வை போன்ற வியாதிகள் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைக்கு வழிவகை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாய் சேய் நலக்கட்டிடம் மற்றும் இடையீட்டு சேவை மைய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக இந்த புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து திருப்பூரில் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் சாந்தி தலைமையில் புதிய கட்டிடத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவமனை சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன், இருப்பிட மருத்துவர் சரவணபிரகாஷ், பொதுப்பணித்துறை பொறியாளர்(மருத்துவம்) செல்வராஜ், துணை பொறியாளர் கோவிந்தராஜ் மற்றும் அரசு டாக்டர்கள், செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதுபோல் உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பச்சிளங்குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த சிறப்பு பிரிவில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எடை குறைவான குழந்தைகள், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. குழந்தைகளின் கிருமித்தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story