மாவட்ட செய்திகள்

பெங்களூருவுக்கு மேலும் 6 ஆயிரம் பஸ்கள்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு + "||" + 6,000 more buses to Bangalore Announcement of chief-Minister Yeddyurappa

பெங்களூருவுக்கு மேலும் 6 ஆயிரம் பஸ்கள்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூருவுக்கு மேலும் 6 ஆயிரம் பஸ்கள்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூரு நகரில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 6 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு, 

பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“பெங்களூருவில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினேன். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு பெங்களூரு போக்குவரத்து நிர்வாக ஆணையத்தை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகரில் அதிக வாகன நெரிசல் உள்ள 12 பகுதிகளை கண்டறிந்துள்ளோம். இந்த பகுதிகளில் பஸ் மற்றும் சைக்கிள்களுக்கு தனி பாதை அமைப்பது என்று முடிவு செய்துள்ளோம். பெங்களூருவில் தற்போது 6,500 நகர பஸ்கள் ஓடுகின்றன. போக்குவரத்து வசதியை மேம்படுத்த கூடுதலாக 6,000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஸ்களை கொள்முதல் செய்வதற்கு பதிலாக, பஸ்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையே வாடகை அடிப்படையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். இந்த புதிய பஸ்களில் 50 சதவீதம் மின்சார பஸ்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த மின்சார பஸ்களுக்கு தனி பாதை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு சக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால் பி.எம்.டி.சி.க்கு மாநில அரசு சார்பில் நிதி உதவி வழங்கி, பஸ் கட்டணத்தை குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கரம் பயன்படுத்துவோர், பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.

2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் வருகிற 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். இந்த திட்டத்தில் 119 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது. பெங்களூரு புறவழிச்சாலை மற்றும் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளை 2023-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

2025-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பாதையின் நீளம் 300 கிலோ மீட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பஸ்களின் சேவையை அதிகரித்து அதன் மூலம் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், காற்று மாசு அடைவது தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் மூலம் ஒயிட்பீல்டில் இருந்து சர்ஜாப்புரா வழியாக ஒசக்கோட்டை கிராஸ் வரை மெட்ரோ பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் சேரும் குப்பை கழிவுகளை விஞ்ஞான பூர்வமாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். குப்பை கழிவுகளை சுமந்து செல்லும் வாகனங் களில் ஜி.பி.எஸ். கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரியாக அமல்படுத்தும் நோக்கத்தில் 20 என்ஜினீயர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள். பெங்களூருவில் தினமும் 4,500 டன் குப்பை கழிவுகள் சேருகின்றன. ஆனால் நம்மிடம் 2,500 டன் குப்பை கழிவுகளை நிர்வகிக்க மட்டுமே வசதிகள் உள்ளன. அதனால் கூடுதலாக குப்பை கிடங்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெங்களூருவில் உள்ள அனைத்து ஏரிகளின் நிர்வாகத்தையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஏரிகளில் நடைபாதை அமைத்து, அவற்றை அழகாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த பேட்டியின்போது, துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் மின் பற்றாக்குறை? எடியூரப்பா பேட்டி
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹாவேரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
2. கர்நாடகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
கர்நாடகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
3. தேவேகவுடா தன்னுடன் செல்போனில் பேசினாரா? முதல்-மந்திரி எடியூரப்பா பதில்
தேவேகவுடா தன்னுடன் செல்போனில் பேசியதாக வெளியான தகவலுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்துள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
4. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆடியோ விவகாரம்; எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் புகார்
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
5. 100 நாட்களில் அக்னி பரீட்சையை எதிர்கொண்டேன்; சாதனை கையேட்டை வெளியிட்டு எடியூரப்பா பேட்டி
கர்நாடகத்தில் நான் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களில் அக்னி பரீட்சையை எதிர்கொண்டேன், இனி மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்துவேன் என்று சாதனை கையேட்டை வெளியிட்டு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.