நாராயணசாமி பொய் சொல்கிறார் - கவர்னர் கிரண்பெடி பதிலடி


நாராயணசாமி பொய் சொல்கிறார் - கவர்னர் கிரண்பெடி பதிலடி
x
தினத்தந்தி 7 Nov 2019 4:45 AM IST (Updated: 7 Nov 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய் சொல்வதாக கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

புதுச்சேரி, 

கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதும், பின்னர் சிறிது காலம் அமைதியாக இருப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இந்த மோதல் மீண்டும் வெடித்துள்ளது.

நேற்று முன்தினம் பேட்டியளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார். விதிமுறைகளை மீறி கவர்னர் செயல்படுவதாகவும் கூறினார்.

தற்போது வெளிமார்க்கெட்டில் கடன் பெற கவர்னருக்கு கோப்பு அனுப்பியும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக பகிரங்க குற்றச்சாட்டினை தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் நாராயண சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஆங்கில பத்திரிகை செய்தியை பதிவிட்டு அதற்கு பதிலாக கூறியிருப்பதாவது:-

இவை அனைத்தும் பொய்யானது. ரூ.900 கோடி வெளிமார்க்கெட்டில் கடன் பெறுவதற்கான பரிந்துரை கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி பெறப்பட்டது. இதுதொடர்பாக நிதித்துறை செயலாளருடன் ஆலோசித்து அக்டோபர் 14-ந்தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த பரிந்துரையும் நிலுவையில் இல்லை.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Next Story