சினிமாபட பாணியில் தங்க கட்டிகளை வயிற்றுக்குள் மறைத்து கடத்திய 2 பெண்கள்
இலங்கையில் இருந்து சென்னைக்கு ‘அயன்’ சினிமாபட பாணியில் தங்க கட்டிகளை விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்த 2 பெண்களை, பரிசோதனைக்காக சுங்க இலாகா அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றபோது மர்மகும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த தெரசா(வயது 35), பாத்திமா(40) ஆகிய 2 பெண்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. தனியறைக்கு அழைத்துச்சென்று சோதித்தபோது, அவர்களின் உள்ளாடையிலும் எதுவும் இல்லை.
ஆனால் 2 பேரின் வயிறு, சற்று பெரிதாக இருந்தது. எனவே அவர்கள் தங்க கட்டிகளை வாயில் போட்டு விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்தார்களா? என ‘ஸ்கேன்’ செய்து சோதனையிட திட்டமிட்ட சுங்க இலாகா அதிகாரிகள், 2 பெண்களையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.
அப்போது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென சுங்க இலாகா அதிகாரிகள் சென்ற காரை வழிமறித்தனர். பின்னர் சுங்க இலாகா அதிகாரிகளிடம் தகராறு செய்த அவர்கள், காரில் இருந்த 2 பெண்களையும் தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.
இதுபற்றி பல்லாவரம் போலீசில் சுங்க இலாகா அதிகாரிகள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இலங்கை பெண்கள் இருவரும் பல்லாவரம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், “எங்களை காரில் கடத்திச்சென்றது யார்? என்று தெரியவில்லை. எங்களுக்கு இனிமா கொடுத்து சாப்பிட செய்தனர். பின்னர் எங்கள் வயிற்றில் இருந்த தங்க கட்டியை எடுத்துக்கொண்டு எங்களை போலீஸ் நிலைய வாசலில் இறக்கிவிட்டு சென்றதாக” தெரிவித்தனர்.
இதையடுத்து பல்லாவரம் போலீசார், 2 பெண்களையும் காரில் கடத்திச் சென்றது யார்? என்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
நீண்ட விசாரணைக்கு பிறகு 2 பெண்களையும் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் 2 பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்ற சுங்க இலாகா அதிகாரிகள் அம்புஜ் திரிபாதி, ரேணுகுமாரி, கார் டிரைவர் ஆகியோரிடம் சுங்க இலாகா உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சுங்க இலாகா அதிகாரிகள் இதுபோன்று சோதனை மற்றும் எக்ஸ்ரே எடுக்க அரசு ஆஸ்பத்திரிக்குத்தான் செல்வார்கள். ஆனால் இந்த பெண்களை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றது ஏன்?. தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்வது கடத்தல் கும்பலுக்கு எப்படி தெரிந்தது?. இதில் கடத்தல்காரர்களுக்கும், சுங்க இலாகாவில் பணியாற்றும் சிலருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன.
மேலும் 2 பெண்களையும் ‘அயன்’ சினிமாபட பாணியில் கடத்திச்சென்று இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருந்த தங்கத்தை வெளியே எடுத்த சம்பவத்தில் தங்கம் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு ஆதரவாக ரவுடி கும்பலும், அரசியல் பிரமுகர்களும் உதவினார்களா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story