தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் பெண் நியமனம்
சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதல்முறையாக பெண் பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் தீயணைப்பு துறை செயல்பட்டு வருகிறது. சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதல்முறையாக ரம்யா ஸ்ரீகண்டன் என்ற பெண் பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர், விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் தென்னிந்தியாவில் முதல் பெண் தீயணைப்பு பணியாளராகவும், இந்திய விமான நிலைய ஆணையத்தின் 3-வது பெண் பணியாளராகவும் சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்து உள்ளார். இவர் பணியில் சேருவதற்கு முன்பாக டெல்லியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் 4 மாதம் கடும் பயிற்சி மேற்கொண்டார்.
இது குறித்து ரம்யா கூறும்போது, “தீயணைப்பு பணி மிகவும் சவால் மிகுந்தது. துணிச்சலுடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. வருங்காலத்தில் தீயணைப்பு துறையிலும் அதிக அளவில் பெண்கள் பங்கேற்பார்கள்” என்றார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், முதுநிலை என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவர், 2 வயது குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story