பயணிகளுக்கு இடையூறாக விமானத்தில் யோகா செய்த வாலிபர் இறக்கி விடப்பட்டார்


பயணிகளுக்கு இடையூறாக விமானத்தில் யோகா செய்த வாலிபர் இறக்கி விடப்பட்டார்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:54 PM GMT (Updated: 6 Nov 2019 10:54 PM GMT)

பயணிகளுக்கு இடையூறாக விமானத்தில் யோகா செய்த வாலிபர், கீழே இறக்கிவிடப்பட்டார்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு நேற்று காலை விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது இலங்கையைச் சேர்ந்த குணசேனா(வயது 27) என்ற வாலிபர், திடீரென இருக்கையில் இருந்து எழுந்து தலைகீழாக நின்று யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தார். இதை பார்த்து விமான பயணிகள் மற்றும் பணிப்பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது நடவடிக்கைகள் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் இதுபற்றி விமானிக்கு பணிப்பெண்கள் தகவல் தெரிவித்தனர். குணசேனாவிடம் இருக்கையில் ஒழுங்காக அமரும்படி ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் குணசேனா தொடர்ந்து யோகா பயிற்சி செய்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அங்கு வந்து குணசேனாவை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியதுடன், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டார்.

அவரிடம் அமெரிக்க நாட்டு பாஸ்போர்ட்டு இருந்தது. அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த குணசேனா, அங்கிருந்து வாரணாசிக்கு சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்த குணசேனா, இலங்கைக்கு செல்ல டிக்கெட் எடுத்து இருந்தது விசாரணையில் தெரிந்தது. மேலும் அவரிடம் இருந்து சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

பின்னர் அவரை விமானத்தில் ஏற்றிச்செல்லும்படி விமான நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஆனால் குணசேனாவை விமானத்தில் ஏற்றிச் செல்ல மறுத்த விமான நிறுவனம், அவரது டிக்கெட் கட்டணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து குணசேனாவை விமான நிலைய போலீசாரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். அவரை போலீசார் இலங்கை தூதரகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story