புதிய தேர்வு நடைமுறைக்கு எதிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பட்டதாரி இளைஞர்கள்
புதிய தேர்வு நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பட்டதாரி இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனைத்தொடர்ந்து அவர்கள் மனு அளித்துச் சென்றனர்.
சென்னை,
சென்னை பார்க் டவுனில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று பட்டதாரி இளைஞர்கள் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து அலுவலகம் மற்றும் அச்சாலை முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று பகல் 12 மணிக்கு கிராமப்புறங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்- இளம்பெண்கள் நூற்றுக்கணக்கானோர் கையில் மனுக்களுடன் ஊர்வலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் நோக்கி வந்தனர். முற்றுகையில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் ஊர்வலமாக வந்தவர்களில் 4 பேர் மட்டும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.
இதுகுறித்து பட்டதாரி இளைஞர் செந்தில்முருகன் என்பவர் கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும் புதிய பாடத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வருடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. 4 தேர்வுகள் நடத்தி கொண்டிருந்தது. தற்போது அதையும் ஒருங்கிணைந்த தேர்வாக நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
முதல்நிலை தேர்வில் இருந்த 100 கேள்விகள் முற்றிலும் நீக்கி, புதிய பாடத்திட்டத்தில் 8 மற்றும் 9-வது யூனிட்களில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்கிறார்கள். முதன்மை தேர்வில் ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. இது ஆங்கில வழி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவே உள்ளது. இந்த நடைமுறைகளை எதிர்த்தும், பழைய பாடத்திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த கோரியும் மனு அளித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story