புனேயில் தனியார் காப்பீட்டு நிறுவனம் சூறை; சிவசேனாவினர் அதிரடி


புனேயில் தனியார் காப்பீட்டு நிறுவனம் சூறை; சிவசேனாவினர் அதிரடி
x
தினத்தந்தி 7 Nov 2019 5:55 AM IST (Updated: 7 Nov 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

பயிர் நஷ்டம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து, புனேயில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தை சிவசேனாவினர் சூறையாடினர்.

புனே,

மராட்டியத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பயிர் சேதம் அடைந்த பகுதிகளுக்கு சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

மாநிலத்தில் சுமார் 50 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாக கூறிய சிவசேனா, அவர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு தொகையை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியது. மேலும் பல காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் புனேயில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தை சிவசேனா தொண்டர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:-

புனே கோரேகாவ் பூங்கா அருகே தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் அந்த காப்பீட்டு நிறுவனத்துக்குள் 35 பேர் அதிரடியாக புகுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

திடீரென அவர்கள் காப்பீட்டு நிறுவன அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் கம்ப்யூட்டர்கள், நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினார்கள். பின்னர் சிவசேனாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இது குறித்து காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் கோரேகாவ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து சில மாதங்களுக்கு முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள அந்த காப்பீட்டு நிறுவனத்தை நோக்கி பேரணி சென்றார். அப்போது, உரிய இழப்பீட்டை விரைந்து வழங்காவிட்டால் சிவசேனா தனது பாணியை கையில் எடுக்கும் என்று உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story