கள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு - தாய்மாமன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக அவரது தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்,
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வேலாயுதம் மகன் நம்பிராஜன் (வயது 29). திருமணம் ஆகவில்லை. இவரது தாய்மாமன் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்த ஆதிமூலம். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு உதவியாக அவரது வீட்டில் நம்பிராஜன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நம்பிராஜனுக்கும், ஆதிமூலம் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஆதிமூலம் மற்றும் அவரது உறவினர்கள் நம்பிராஜனை கண்டித்தனர். ஆனாலும் நம்பிராஜன் அதனை பொருட்படுத்தாமல், கள்ளக்காதலை தொடர்ந்தார். மேலும் ஆதிமூலத்திடம் தொடர்ந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் ஆதிமூலம் ஆட்டுக்கிடை அமைத்துள்ளார். கடந்த மாதம் 31-ந் தேதி இரவு ஆதிமூலம் மது குடிப்பதற்காக நம்பிராஜனை அழைத்துச் சென்றார். ஆலங்குளம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு, மேற்கண்ட தோட்டத்தில் அமர்ந்து இருவரும் மது குடித்தனர்.
அப்போது ஆதிமூலம், தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு நம்பிராஜனிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ஆதிமூலம், அருகில் கிடந்த இரும்பு கம்பியால் நம்பிராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நம்பிராஜன் அலறி துடித்தார்.
நம்பிராஜன் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தோட்டத்துக்கு வந்து பார்வையிட்டனர். அங்கு தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நம்பிராஜனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் ஆதிமூலம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் இறந்தார். இதையடுத்து ஆலங்குளம் போலீசார் இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி ஆதிமூலத்தை கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை இரும்பு கம்பியால் தாய்மாமன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story