பாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி சாவு


பாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 7 Nov 2019 9:06 PM GMT)

பாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி இறந்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை சாந்திநகர் அருகே உள்ள வெட்டுவான்குளத்தில் அமலைச்செடிகளுக்கு மத்தியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீருக்குள் கிடந்த பிணத்தை மீட்ட னர். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் திம்மராஜபுரத்தை சேர்ந்த அனிபா மகன் மைதீன் பிச்சை (வயது 33) என்பது தெரியவந்தது. இவர் மரக்கடையில் வேலை செய்து வந்தார். தாய், தந்தை இல்லாததால் தனியாக வசித்து வந்த, இவர் கடந்த 3-ந்தேதிக்கு பிறகு திடீரென்று காணாமல் போய் உள்ளார். அன்றைய தினம் மைதீன் பிச்சை அருகில் உள்ள குளத்தங்கரைக்கு சென்றிருந்த போது திடீரென்று வலிப்பு ஏற்பட்டு உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மைதீன் பிச்சை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story