மாணவர்களுக்கு நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு
மாணவர்களுக்கு கல்வியுடன் நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கம் சார்பாக குழந்தைகள் தின விழா தூத்துக்குடியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களின் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார்.
பின்னர் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது;-
மாணவ-மாணவிகள் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களிடம் தான் அதிக நேரம் இருப்பார்கள். இந்த நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை மட்டும் அல்லாமல் நற்பண்புகளையும் கற்றுத்தர வேண்டும்.
விளையாட்டில் மாணவர்கள் நல்ல நிலையை அடையவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களை திறன் போட்டியில் கலந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு வீட்டில் பெற்றோர் அளிக்கும் பாதுகாப்பை போல் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் கல்வியினை கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்க தலைவர் சங்கரலிங்கம், துணை தலைவர் ராஜசேகரன், செயலாளர் ஜோசப், பொருளாளர் ஜோய்பெல் பிரேங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story