அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2019 4:00 AM IST (Updated: 8 Nov 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதால், அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் எச்சரித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தலைமையில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் முன்னிலை வகித்தார். அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வர உள்ளதால் அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதசார்பான பொறுப்பாளர்களுக்கு தனித்தனியாக கூட்டம் நடத்தப்பட்டது. தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கோர்ட்டு தீர்ப்பு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மகிழ்ச்சி மற்றும் துக்கத்தை வெளிப்படுத்தக்கூடாது. பட்டாசு வெடிக்கக்கூடாது. இனிப்பு வழங்கி கொண்டாடக்கூடாது. துக்கநாளாக அனுசரிக்க கூடாது. துண்டறிக்கை, விளம்பர பலகை மூலம் எதிர்ப்போ, ஆதரவோ தெரிவிக்கக்கூடாது. சமூக வலைத்தளங்களில் எந்தவித விமர்சனமும் செய்யக்கூடாது. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் எச்சரித்தார்.

மேலும் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், பள்ளி, கல்லூரி பொறுப்பாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், பட்டாசு கடை வியாபாரிகள், வெடிபொருள் விற்பனையாளர்கள் ஆகியோருக்கும் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது.

பிரிண்டிங் நிறுவன உரிமையாளர்கள் துண்டறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக அச்சிடக்கூடாது. லாட்ஜ் உரிமையாளர்கள், சந்தேகப்படும் நபர்கள் வந்தால் அறைகளை வாடகைக்கு விடக்கூடாது. மாணவர்கள் சமூக வலைதளங்களில் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்யக்கூடாது. திருமண மண்டபங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது. பட்டாசு கடைக்காரர்கள் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. வெடிபொருள் விற்பனையாளர்கள் வெடிபொருளை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

Next Story