ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Nov 2019 4:30 AM IST (Updated: 8 Nov 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஈரோடு,

ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டுவதாலும், ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வரை ரோட்டோரங்களை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது.

இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் ரோட்டோரங்களில் செயல்படும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் வந்தனர்.

அகற்றம்

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வரை உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது ஜவுளிக்கடைக்காக போடப்பட்டு இருந்த பெரிய அளவிலான மரப்பலகைகளை போலீசார் அகற்றி லாரியில் ஏற்றிச்சென்றனர். நேற்று 50-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் அகற்றப்பட்டன.

மேலும் அந்த பகுதியில் பெரிய கடைகள் முன்பு, போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள். இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வரை ரோட்டோரங்களில் வியாபாரிகள் ஜவுளிக்கடைகள் அமைப்பதும் பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் அதை அகற்றுவதும் வழக்கமாக உள்ளது.

எனவே அங்கு நிரந்தரமாக ஜவுளிக்கடைகள் செயல்படாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Next Story