உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா? - அதிகாரிகள் ஆய்வு
உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விருத்தாசலம்,
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து 3 ஆயிரத்து 160 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டுவரப்பட்டு, அவை விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இந்த கருவிகளை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியது.
விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் பாலு, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், தேர்தல் உதவியாளர் தினகரன், அ.தி.மு.க. அருளாகரன், தங்கராசு, மணிமாறன், தி.மு.க. வக்கீல் அருள்குமார், பொன்கணேஷ், பா.ம.க. நகர செயலாளர் விஜயகுமார், தே.மு.தி.க. ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சி அருள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டது.
திருச்சி பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்திருந்த பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் நல்ல முறையில் செயல்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு செய்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் இருந்து வாக்குப்பதிவு செய்தவுடன் ‘பீப்’ ஒலி கேட்கிறதா? என்றும், சிவப்பு விளக்கு எரிகிறதா? என்றும் பரிசோதித்தனர். மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளதா? என்றும் தெரிந்து கொண்டனர். மேலும் செயல்படாத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு மாற்றாக வேறு எந்திரங்களை கொண்டுவந்து உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என நகராட்சி ஆணையாளர் பாலு தெரிவித்தார்.
Related Tags :
Next Story